கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த கலபொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தலையிட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஞானசார தேரரின் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எழுத்துமூலம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மகாநாயக்க தேரர்கள் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் வரையில் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.








