வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்பயணிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (24) பிற்பகல் 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் இன்று (24) தாழமுக்கமாக வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து நாளை (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாளை மறுதினம் (26) காலை மத்திய மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இது புயலாக வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வடக்கு அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை அறிவித்தல்கள் மற்றும் முன்னறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்பயண சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








