மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் கிளியன்குடியிருப்புப் பகுதியில் இன்று (24) மாலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த இராணுவத்தினருக்குச் சொந்தமான டிபென்டர் (Defender) ரக வாகனம், கிளியன்குடியிருப்புப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது வாகனத்தில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாகப் பேசாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய 11 இராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர், உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த விபத்தில் டிபென்டர் ரக வாகனம் பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








