கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளுக்கும் கொழும்பு மாநகரசபை அதிகாரிகளுக்கும் இடையே இன்று (24) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் பிக்குகளால் அமைக்கப்பட்டிருந்த கொடிகள் மற்றும் பதாகைகளை கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் அகற்ற முற்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளை அணுகிய விஹாரமகாதேவி பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அங்குள்ள கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறும் அல்லது அவற்றை அமைப்பதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த கொடிகள் மற்றும் பதாகைகளைத் தாங்கள் அகற்ற வேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அங்கிருந்த பதாகைகளை அகற்றுவதற்கு பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதிலும், அங்கிருந்த பிக்குகளும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.







