சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் ஏற்பட்ட 7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக சின்ஹுவா (Xinhua) அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (22) உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பேரிடர் நிவாரணப் பணிகளும் இடம்பெற்று வருவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம், நாக்கூ (Nagqu) பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவிலும், பிராந்தியத் தலைநகரான லஹாசாவுக்கு (Lhasa) வடகிழக்கே சுமார் 390 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள மலைப்பகுதியில் காணப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இரண்டாம் நிலை அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி பாகென் (Baqen) கவுண்டியில் உள்ள மாரு (Maru) நகரத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் நகர அலுவலகத்தில் தெளிவாக உணரப்பட்டதாகவும், கட்டடச் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நகர துணைத் தலைவர் லஹவாங் தாக்போ (Lhawang Dagpo) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகென் கவுண்டியின் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடந்த 2025 ஜனவரியில் திபெத்தின் டிங்கிரி (Tingri) கவுண்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 126 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.






