பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கு அணிக்கு முழு உரிமை உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேவேளை, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக அணியின் கவனம் தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு, அணியை வலுப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை அணியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காக, இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு முறையான செயற்திட்டமொன்றை உருவாக்குவது அவசியம் என்றும் குமார் சங்கக்கார தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் கீழ் நேற்று (22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை, 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி எட்டியது.
இதன்மூலம், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்து இலங்கை அணி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.








