ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பல்வேறு பகுதிகளில், தமது விவசாய நிலங்களில் பணியாற்றும் பாலஸ்தீன விவசாயிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஒலிவ் அறுவடைப் பருவம் ஆரம்பமானது முதல், பாலஸ்தீன விவசாயிகள் தமது விவசாய நிலங்களுக்குச் செல்வதை இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
ஜெனின், ரமல்லா, நப்லுஸ், சல்ஃபிட், துல்கர்ம் மற்றும் கல்கிலியா ஆகிய ஆளுநர் பிரிவுகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒலிவ் தொழில்துறை தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:
பாலஸ்தீனத்தில் சுமார் 1.3 கோடி ஒலிவ் மரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு கோடி மரங்கள் காய்க்கும் நிலையில் உள்ளன.
சுமார் ஒரு இலட்சம் பாலஸ்தீனக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்காக ஒலிவ் மரங்களைச் சார்ந்துள்ளன. அத்துடன், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட 30,000 பேர் இத்தொழில்துறையின் மூலம் நேரடியாகப் பயனடைகின்றனர்.
ஒலிவ் அறுவடைப் பருவத்தில் இத்தொழில்துறை ஆண்டுதோறும் 150 மில்லியன் முதல் 180 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானத்தை ஈட்டுகிறது. இது பாலஸ்தீனத்தின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு பருவத்திற்கான சராசரி ஒலிவ் உற்பத்தி 22,000 தொன்களாகப் பதிவாகியுள்ளது. எனினும், இவ்வாண்டு இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்கள் காரணமாக உற்பத்தி கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக, பாலஸ்தீன விவசாயிகள் இவ்வாண்டு முன்கூட்டியே ஒலிவ் பழங்களை அறுவடை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட ஒலிவ் எண்ணெய் உற்பத்தியில் பாதியளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.





