‘அனைத்துக் குண்டுகளுக்கும் தந்தை’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய ஆயுதமொன்றை வெளியிடுவதற்குத் தயாராகி வருவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக IRGC பேச்சாளர் ஹொசைன் மொஹெப்பி தெரிவித்துள்ளார்.
ஈரானின் ‘யங் ஜர்னலிஸ்ட்ஸ் கிளப்’ செய்தி நிறுவனத்தின்படி, “அனைத்துக் குண்டுகளுக்கும் தந்தை எனப்படும் ஆயுதத்தை வெளியிடுவதற்கான ஆயத்தக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இது எதிரிக்கு ஒரு புதிய விடயமாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த ஆயுதத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் அல்லது அதன் தாக்குதல் திறன் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க உத்தரவிடும் பட்சத்தில், அந்நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைத் தாக்குவதற்கான திட்டங்களைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகப்பெரிய அணுவாயுதமற்ற குண்டான ‘அனைத்துக் குண்டுகளுக்கும் தாய்’ (Mother of All Bombs) என அழைக்கப்படும் குண்டைப் பயன்படுத்துவது தொடர்பிலும் இந்தத் திட்டங்களில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.






