தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சேவைப் பகுதியில் இரண்டு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு 562.04 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த இந்தப் பிரேரணைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெலிப்பென்ன சேவைப் பகுதியை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முழுமையான துணை நிறுவனமான கனோவின் ஹோட்டல்ஸ் அண்ட் ஸ்பாஸ் (தனியார்) நிறுவனம் பராமரித்து வருகின்றது.
அங்குள்ள தற்போதைய கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்போது, அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லை என்பது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், நாளொன்றுக்கு தலா 200 கனமீற்றர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திறன்கொண்ட இரண்டு புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்குமாறு பரிந்துரைத்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது.








