கொலன்னாவை மழைநீர் வடிகால் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை மீள ஆரம்பித்து நிறைவு செய்வதற்காக, 15,077.82 மில்லியன் ரூபா (சுமார் 15.08 பில்லியன் ரூபா) பெறுமதியான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாண்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த திட்டம் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, திட்டத்தின் பணிகள் கடுமையான தாமதத்தை எதிர்கொண்டன.
இதனையடுத்து, எஞ்சியுள்ள பணிகளை முன்னெடுப்பதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், மறுசீரமைக்கப்பட்ட திட்டம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட செலவுக் கட்டமைப்பை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ், 3,250 மீற்றர் நீளமான சலலிஹினி மாவத்தை கால்வாயின் எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்தல் மற்றும் 3,868 மீற்றர் நீளமான தஹம்வல கால்வாயை நிர்மாணித்தல் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், கனமழையின்போது வெள்ளநீரை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக, நீரைத் தேக்கி வைக்கும் குளங்கள் மற்றும் நீர்ச் சேமிப்புப் பகுதிகளும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 4,475 மீற்றர் நீளமான பசியான கால்வாய் மற்றும் 650 மீற்றர் நீளமான தண்டுகொடுவ கால்வாய் ஆகியவற்றைப் புனரமைத்தல், தண்டுதொட்ட வெள்ளக் கட்டுப்பாட்டு மதகைச் சீரமைத்தல் ஆகிய பணிகளும் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக, ஒரு வினாடிக்கு ஒரு கனமீற்றர் நீரை வெளியேற்றும் திறன்கொண்ட மூன்று நடமாடும் நீரிறைக்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தேவையான காணி சுவீகரிப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்காக, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் சுமார் 1,015 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.








