அப்ரா அன்சார்
கொழும்பு:கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ பகுதியில் அமைந்துள்ள பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை (21) காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
இதன்போது, மெதவல (பழைய மற்றும் புதிய நீர்த்தாங்கிகள் ஊடான விநியோகப் பகுதிகள்), கல்லேனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம உள்ளிட்ட பகுதிகளிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
எனவே, நீர் விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.








