இலங்கைப் பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் இன்று (20) விமரிசையாக நடைபெற்றது.
சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், பல்லின மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, இந்து மதக் குருமார்களால் நவராத்திரி பூஜைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அனைவருக்கும் ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டன. அத்துடன், பரதநாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நற்சிந்தனையுடன் நடத்தப்படும் இத்தகைய பூஜை விழா முழு நாட்டிற்கும் ஆசீர்வாதமாக அமையும் எனத் தெரிவித்தார்.
ஏனைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து, சமய மற்றும் கலாசார நல்லிணக்கத்தைப் பேணுவதன் ஊடாகச் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, இந்து சமய நம்பிக்கையின்படி துர்க்கை அம்மனின் அருளால் தீமைகள் நீங்கவும், லட்சுமி தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெருகவும், சரஸ்வதி தேவியின் அருளால் ஞானம் மேம்படவும் தாம் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அனைவரினதும் பங்களிப்புடன் எவ்வித வேறுபாடுகளுமின்றி இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்வது சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்து பக்தர்களால் பக்தியுடன் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, முப்பெரும் தேவியரை வழிபடும் ஒன்பது இரவுகளைக் கொண்ட பண்டிகையாகும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடும் நிகழ்வுகள் இடம்பெறும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் நடைபெறும்.
இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக உள்ளிட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற செயலக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.









