ஏர் இந்தியா விமானம் ஒன்றை நடுவானில் கடத்த முயற்சி செய்யப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான AI-2030 என்ற விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானி 7500 என்ற அவசரக் குறியீட்டை அகமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சில வினாடிகள் அனுப்பியுள்ளார்.
இந்தக் குறியீடு விமானக் கடத்தல் தொடர்பான எச்சரிக்கையாகக் கருதப்படுவதால், பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் திருப்பிவிடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த விமானிகள் மற்றும் பயணிகள் அனைவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விமானம் தனியான இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விமானி ஏன் இந்த அவசரக் குறியீட்டை அனுப்பினார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.







