இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையிலான பாதுகாப்பற்ற உடலுறவு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது, எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒரு பெண் அடையாளம் காணப்படும்போது, ஏழு ஆண்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் போக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (14) சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறையின் தற்போதைய போக்குகள், நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறை விசேட வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் (SLCoSHH) தலைவியான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய, இலங்கையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருட்களை ஊசி மூலம் செலுத்திக்கொள்வதன் மூலமும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நோய்ப் பரவல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஆபத்தான நிலைமையாக இது காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.








