கல்முனையைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவரசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட அனைவருக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தானும் தனது குழுவினரும் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தீர்மானத்திற்காக சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்திற்கும் அந்நாட்டு மன்னருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.








