ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் உள்ள எஃப்.எம். வானொலி நிலையங்கள் ஊடாக ஒலிபரப்பப்பட்டு வந்த பிபிசி (BBC) செய்திச் சேவையைத் தலிபான் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
பிபிசி நிறுவனம் தொடர்ச்சியான விதிமீறல்களில் ஈடுபட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த விதிமீறல்கள் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரண்டு முக்கிய ஊடக நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து வானொலி ஒலிபரப்பை மேற்கொண்டு வந்த ஒரே சர்வதேச செய்தி நிறுவனமாக பிபிசி இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மில்லியன் கணக்கான ஆப்கானிய மக்கள் துல்லியமான செய்திகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிபிசியை நம்பியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.
எனினும், எஃப்.எம். ஒலிபரப்பு இடைநிறுத்தப்பட்டாலும், குறுவலை (Shortwave), நடுத்தர அலை (Medium Wave), இணையதளம் மற்றும் செயற்கைக்கோள் ஊடாகப் பாஷ்டோ, தாரி மற்றும் ஆங்கில மொழிகளில் தனது சுயாதீன செய்திச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் முதியவர்கள் மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிபிசியின் கல்வி மற்றும் செய்தி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பாடசாலைக் கல்வியைத் தொடரத் தடை விதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு பிபிசியின் கல்வி நிகழ்ச்சிகள் பெரும் உதவியாக இருந்து வந்துள்ளன.
2021ஆம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இசை ஒலிபரப்புக்குத் தடை விதித்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆண்களுடன் இணைந்து பெண்கள் ஒலிபரப்புகளில் பங்கேற்பதற்குத் தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








