பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும், மு.ப. 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 20ஆம் திகதி – செவ்வாய்க்கிழமை
மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 21ஆம் திகதி – புதன்கிழமை
மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை பொதுத் தனியார் முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பி.ப. 5.00 மணிக்கு ஐந்து சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
பி.ப. 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின்போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி – வியாழக்கிழமை
மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலங்கள் (சட்டமூல இலக்கங்கள் 70 மற்றும் 80) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
இதன் பின்னர், ஐந்து சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
அன்றைய தினம் பி.ப. 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 23ஆம் திகதி – வெள்ளிக்கிழமை
மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை வெறிநாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் தொடர்பான சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.








