யெமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மூடல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஒக்டோபர் 12ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட்ட விமானப் போக்குவரத்து அறிவித்தலில் (NOTAM), ஒக்டோபர் 17ஆம் திகதி கிரீன்விச் நேரப்படி இரவு 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சவூதி அரேபிய நேரப்படி ஒக்டோபர் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியாகும்.
விமான நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுகளை நிறைவு செய்வதற்கும், மீண்டும் சேவைகளை ஆரம்பிப்பதற்கான தயார் நிலையை உறுதிப்படுத்துவதற்கும் மூடல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பொது அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பிராந்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.
விமான நிலையத்தின் மூடல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல விமான நிறுவனங்கள் ரியாத்துக்கான மற்றும் ரியாத்திலிருந்து புறப்படும் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
விமானக் கண்காணிப்புத் தரவுகளின்படி, பெரும்பாலான விமானங்கள் ரியாத்தைத் தவிர்த்து இயக்கப்படுகின்றன. எனினும், ஜித்தா உள்ளிட்ட சவூதி அரேபியாவின் ஏனைய விமான நிலையங்கள் ஊடான விமான சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
விமானப் போக்குவரத்துப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் (Cirium) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சவூதி அரேபிய விமான நிலையங்களில் 46.4 சதவீத விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இது தாக்குதல்களால் பிராந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை வெளிப்படுத்துகிறது.








