சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், ரஷ்யாவிடமிருந்து மேலதிக டீசல் விநியோகம் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (13) அதிகாலை வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக, விநியோகத் தடைகள் குறித்த அச்சத்தால் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 2 அமெரிக்க டொலர் வரை அதிகரித்த எண்ணெய் விலை, பின்னர் சரிவடைந்துள்ளது.
இதன்படி, பிரென்ட் (Brent) கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 0.57 சதவீதத்தால் குறைந்து, பீப்பாய் ஒன்றுக்கு 106.04 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை 0.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, பீப்பாய் ஒன்றுக்கு 93.27 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலையாக, திங்கட்கிழமை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 106.65 அமெரிக்க டொலரில் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில், உலகச் சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, உக்ரைனுக்கு எதிரான போரின் மூலம் ரஷ்யா வருவாய் ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய எரிபொருள் மீதான தடைகளை அமெரிக்க நிர்வாகம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து மேலதிக எரிபொருள் கிடைப்பதன் மூலம், சர்வதேச சந்தையில் நிலவும் விநியோகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், எண்ணெய் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்த விநியோகம் தொடர்பான கவலைகளைத் தணிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரும் வரை அந்நாட்டிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் அமெரிக்கச் சட்டத்தை, ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இடையிலான இந்த உடன்பாடு மீறுவதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் இரு பிரதான அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.








