இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபையில் தாம் முன்வைக்கும் பிரேரணைகள் மற்றும் கேள்விகள் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படுவதில்லை எனத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எட்டு மாநகர சபை உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும் ஒக்டோபர் மாதப் பொதுச் சபைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மாநகர சபையின் ஆளும் தரப்பினரின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி குழுத் தலைவி திலினி ஜயகொடி ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் தமது முன்மொழிவுகளோ கேள்விகளோ இடம்பெறாமை ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
முந்தைய சபைக் கூட்டங்களில் தாம் முன்வைத்த கேள்விகளும் பிரேரணைகளும் அடுத்த மாதக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படும் என மேயரின் அறிவுறுத்தலுக்கு அமைய மாநகர சபைச் செயலாளர் உறுதியளித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, இம்முறையும் அவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் மாநகர சபைக் கூட்டங்களை நடத்திவிட்டு, கேள்விகளோ பிரேரணைகளோ இல்லாத நிகழ்ச்சி நிரல்களை முன்வைப்பதன் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதற்கு ஆளும் தரப்பு முயற்சிப்பதாகவும், தமக்கு விருப்பமான சர்வாதிகாரப் போக்கில் சபையை நடத்த முற்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
நீர்கொழும்பு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிப்பதற்கான உரிமை வழங்கப்படாவிட்டால், பொதுமக்களின் பணத்தைச் செலவிட்டு இவ்வாறான பொதுச் சபைக் கூட்டங்களை நடத்துவதில் அர்த்தமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சுயேச்சைக் குழு இலக்கம் 01 இனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் திஷான் மெண்டிஸ் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளும் தரப்புக்கு ஆதரவளித்து வந்ததாகவும், அவர்கள் முன்வைத்த அனைத்துப் பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், மக்கள் வழங்கிய ஆணையை ஆளும் தரப்பு தவறாகப் பயன்படுத்துவதாகவும், தற்போதைய நிலைமையில் தமது ஆதரவினால் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை எனத் தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நிலைமை திருப்திகரமாக இல்லாத காரணத்தினாலேயே தாம் கடுமையான கருத்துகளை முன்வைக்க வேண்டியிருந்ததாகவும், அதன் பின்னர் மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், ஆளும் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட எந்தவொரு விடயமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய திஷான் மெண்டிஸ், குறித்த வரவு செலவுத் திட்டம் முழுமையான தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.







