2050ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய கார்பன் (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச இலத்திரனியல் கழிவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வேகமாக அதிகரித்து வரும் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக, அரச, தனியார் மற்றும் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அரச துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், அவற்றிலிருந்து உருவாகும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது சுற்றாடலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
எனினும், இக்கழிவுகளைப் பொறுப்புடன் சேகரித்தல், மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்துதல் மற்றும் விஞ்ஞான ரீதியாக மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றின் ஊடாக நிலையான பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளைத் திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கு, உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரையிலான முழுமையான ஆயுட்காலச் சுழற்சியையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றாடல் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ (Extended Producer Responsibility – EPR) ஏற்பாடுகள் மற்றும் விரைவில் அங்கீகாரம் பெறவுள்ள மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசியக் கொள்கை ஆகியவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், பொதுமக்களும் நிறுவனங்களும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அகற்றுவதற்கு வசதியாக, நாடளாவிய ரீதியில் உள்ள தொலைத்தொடர்பு சேவை மையங்கள் மற்றும் விசேட கழிவு சேகரிப்பு நிலையங்கள் ஊடாக இத்திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.







