நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்.
எனவே, இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







