அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள ஆலயமொன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண ஆலயத்தின் பிரதம பிக்குவாக பணியாற்றிய 71 வயதான நவத்துன்ன விஜிதவுக்கு விக்டோரியா மாநில மாவட்ட நீதிமன்றம் நேற்று (8) இந்தத் தண்டனையை விதித்துள்ளதாக ABC News Australia தெரிவித்துள்ளது.
குறித்த குற்றங்கள் மிகவும் பாரதூரமான நம்பிக்கைத் துரோகம் என நீதிபதி பர்தீப் திவானா தெரிவித்துள்ளார்.
இலங்கை பௌத்த சமூகத்தில் மதிக்கப்பட்ட பதவியைப் பயன்படுத்தி குறித்த பிக்கு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு விஜித 17 குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவற்றில் சிறுமியை பாலியல் ரீதியாக ஊடுருவிய 9 குற்றங்களும், சிறுமியிடம் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட 8 குற்றங்களும் அடங்குகின்றன.
1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மெல்பேர்னின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ பகுதிகளில் இயங்கிய ஆலயத்தில் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்த சந்தர்ப்பங்களிலும், சிறுமிகளை மீண்டும் மீண்டும் தனது தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தமது குடும்பத்தினருடன் மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக ஆலயத்திற்கு சென்றிருந்தனர்.
பெற்றோர் தமது பிள்ளைகள் ஆலயத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பியிருந்த நிலையில், அந்த நம்பிக்கையை பிக்கு தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகால உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், சிலர் பௌத்த மத நடைமுறைகளுடன் தொடர்புடைய மன உளைச்சலை தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு விஜித மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையின்போது விஜித குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர். மேலும், சில முறைப்பாட்டாளர்களை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
விஜித குறைந்தது 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரே பிணையில் விடுதலை பெறுவதற்கான பரிசீலனைக்கு தகுதி பெறுவார்.
தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் தனது ஆதரவாளர்களை நோக்கி விஜித புன்னகைத்து கையசைத்தபோது, பல பாதிக்கப்பட்டவர்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக ABC News தெரிவித்துள்ளது.
இலங்கையில் பிறந்த விஜித, தனது 15ஆவது வயதில் பௌத்த துறவறத்தில் இணைந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் ஸ்வீடனுக்குச் சென்று அந்நாட்டு குடியுரிமையைப் பெற்றதுடன், 1994ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து தம்ம சரண ஆலயத்தின் பிரதம பிக்குவாக பொறுப்பேற்றுள்ளார்.
சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் விஜித நாடுகடத்தப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்வீடனுக்குத் திரும்பிச் செல்லத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
விஜிதவுக்கு ஞாபக மறதி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவரது சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள போதிலும், விஜித மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.








