கொழும்பு கோட்டை பகுதியில் கட்டாய SLS சான்றிதழின்றி மின் உபகரணங்களை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை இரண்டு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா 100,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஒரு நிறுவனத்துக்கு கட்டாய SLS தயாரிப்பு சான்றிதழ் குறியீடு இன்றி 98 AC/DC 12V அடாப்டர்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மற்றைய நிறுவனத்துக்கு, நடைமுறையில் உள்ள கட்டாய SLS தரநிலைக்கு இணங்காத 200 பொதிகளிலான பல்நோக்கு LED விளக்குகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2017 டிசம்பரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட 63ஆம் இலக்க உத்தரவின் கீழ் இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உத்தரவு 2019 ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த உத்தரவின் பிரகாரம், 250 வோல்ட்டுகளுக்கு மேற்படாத குறிப்பிட்ட மின் உபகரணங்கள், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்படும் உரிய SLS தயாரிப்பு சான்றிதழ் குறியீட்டைக் கொண்டிருக்காவிட்டால், அவற்றை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தேவை அனைத்து மின் உற்பத்திப் பொருட்களுக்கும் பொருந்தாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
குறித்த உத்தரவின் கீழ் உள்ளடங்கும் குறிப்பிட்ட மின் உபகரணங்களான சில வகை பிளக்குகள், சொக்கெட் அவுட்லெட்டுகள், நீடிப்பு மின்கம்பிகள், கையடக்க சொக்கெட் அவுட்லெட்டுகள், அடாப்டர்கள், ஃபியூஸ்டு கனெக்ஷன் யூனிட்டுகள், ஃபியூஸ்டு கன்வர்ஷன் பிளக்குகள் மற்றும் கேபிள் ரீல்கள் ஆகியவற்றுக்கே இந்தக் கட்டாய SLS தரநிலை பொருந்தும்.
இத்தகைய பொருட்களை கொள்வனவு செய்யும்போது உரிய SLS சான்றிதழ் குறியீடு உள்ளதா என்பதை பரிசோதிப்பதுடன், முறையான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டாய தரநிலைகளுக்கு இணங்காத மின் உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும்.








