இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியதன் மூலம் முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளதாக உலக வங்கி குழுமம் தெரிவித்துள்ளது.
உலக வங்கி குழுமம் வெளியிட்டுள்ள அரையாண்டு பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியுடன் ஒப்பிடுகையில் குடும்ப வருமானங்கள் மற்றும் தொழிலாளர் சந்தை நிலைமைகள் இன்னும் பின்தங்கியுள்ளதால், பொருளாதார மீட்சி முழுமையானதாகவோ அல்லது அனைவருக்கும் சமமானதாகவோ இல்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்துறையின் வலுவான செயல்திறன் மற்றும் சேவைத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2026ஆம் ஆண்டில் 4.4 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடியின்போது இழந்த வாழ்க்கைத் தரத்தை பல குடும்பங்கள் இன்னும் மீட்டெடுக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை விகிதம் சுமார் 14 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நெருக்கடிக்கு முந்தைய மட்டத்தை விட உயர்வாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைப் பணவீக்கம் 2026ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், 2028ஆம் ஆண்டளவில் 5.0 சதவீத பணவீக்க இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டில் அதிகரித்த எரிசக்தி விலைகள் மற்றும் பலவீனமான ரூபாவின் தாக்கம் இலங்கைப் பொருளாதாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் என உலக வங்கி குழுமம் தெரிவித்துள்ளது.








