உலகளவில் 2024ஆம் ஆண்டில் பதிவான புதிய புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் எட்டில் ஒன்று, சிகிச்சையளிக்கக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய தொற்றுக்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
The Lancet Oncology இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, 2024ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 23 இலட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் தொற்றுக்களுடன் தொடர்புடையவையாக இருந்துள்ளன. இது பதிவான மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் 12 சதவீதமாகும்.
இவற்றில் பெரும்பாலானவற்றை தடுப்பூசி, பரிசோதனை அல்லது ஒப்பீட்டளவில் எளிதான சிகிச்சைகள் மூலம் தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையின் தொற்றுநோயியல் நிபுணரும் ஆய்வின் பிரதான ஆசிரியருமான கேரி கிளிஃபோர்ட், “புற்றுநோய் ஏற்படும் நிலைக்கு முன்பே நாம் தலையிட முடியும். தடுப்பு நடவடிக்கைகள் செயற்படும்” என தெரிவித்துள்ளார்.
H. pylori மற்றும் HPV முக்கிய காரணிகள்
ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகிய இரண்டு தொற்றுக்கள் குறிப்பாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
H. pylori தொற்று பெரும்பாலும் வயிற்றுப் புற்றுநோயுடனும், HPV தொற்று பெரும்பாலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடனும் தொடர்புடையதாக காணப்பட்டுள்ளது.
இவ்விரு தொற்றுக்களும் இணைந்து 2024ஆம் ஆண்டில் 15 இலட்சத்துக்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருந்ததாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஹெபடைட்டிஸ் B வைரஸ் சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் புற்றுநோய் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகவும், அவற்றில் பெரும்பாலானவை கல்லீரல் புற்றுநோய்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன்-பார் வைரஸ் (EBV) சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் புற்றுநோய் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உருவாகும் நாசோபாரிஞ்சியல் புற்றுநோய்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெபடைட்டிஸ் C வைரஸ் சுமார் 1 இலட்சத்து 60 ஆயிரம் புற்றுநோய் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகவும், அவற்றில் பெரும்பாலானவை கல்லீரல் புற்றுநோய்களாக இருந்ததாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புற்றுநோயைத் தடுப்பதற்கான வாய்ப்புகள்
தொற்றுக்களுடன் தொடர்புடைய புற்றுநோய்களில் சிலவற்றுக்கு ஏற்கனவே பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
HPV மற்றும் ஹெபடைட்டிஸ் B ஆகியவற்றுக்கு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. அதேவேளை, H. pylori மற்றும் ஹெபடைட்டிஸ் C ஆகியவற்றை பரிசோதனை செய்து, தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் சிகிச்சையளிக்க முடியும்.
சில வகையான புற்றுநோய்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பான மாற்றங்களையும் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.
H. pylori தொற்று வயிற்றில் நீண்டகால அழற்சியை ஏற்படுத்தி, வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இந்தத் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பதன் ஊடாக அந்த அபாயத்தைக் குறைக்க முடியும்.
அதேபோன்று, ஹெபடைட்டிஸ் B தொற்று காலப்போக்கில் கல்லீரலைப் பாதித்து கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இதனைத் தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது.
HPV என்பது 200க்கும் மேற்பட்ட தொடர்புடைய வைரஸ்களைக் கொண்ட ஒரு குழுவாகும். சில வகையான HPV தொற்றுக்கள் கர்ப்பப்பை வாய், மலக்குடல், ஆண்குறி, யோனி, பெண்ணுறுப்பு மற்றும் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். HPV தடுப்பூசி மூலம் இத்தகைய தொற்றுக்களைத் தடுக்க முடியும்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் அதிக பாதிப்பு
உலகளவில் தொற்றுக்களுடன் தொடர்புடைய புற்றுநோய் பாதிப்புகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
தொற்றுக்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 77 சதவீதம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பதிவாகியுள்ளன.
தடுப்பூசி, பரிசோதனை, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான அணுகலில் காணப்படும் வேறுபாடுகளுடன், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தொற்றுக்களின் பரவல் அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தொற்று இருப்பதால் ஒருவருக்கு கட்டாயம் புற்றுநோய் ஏற்படும் என்று அர்த்தமில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ள பெரும்பாலானோருக்கு புற்றுநோய் ஏற்படாது.
தொற்றுக்களைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பரவலாகவும் சமமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் உலகளவில் இலட்சக்கணக்கான புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(CNN)








