இஸ்ரேல் மீதான 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“இந்த கொடூரங்கள் ஒருபோதும் மீண்டும் இடம்பெறக் கூடாது” என குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான மோதல்கள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அளவிட முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பாரிய உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தொடர்ந்து சகிக்க முடியாத நிலைமைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் ஓரளவு நிவாரணத்தை வழங்கிய போதிலும், அது இதுவரை பாதுகாப்பையோ, போதுமான மனிதாபிமான உதவிகளையோ அல்லது மீட்பு மற்றும் அமைதிக்கான நம்பகமான பாதையையோ உறுதிப்படுத்தவில்லை என குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
“போர் நிறுத்தம் நிரந்தரமானதாக மாற வேண்டிய நேரம் இது. மனிதாபிமான உதவிகளைப் பெருமளவில் வழங்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டிய நேரமும் இதுவே” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நினைவு நாள், பிராந்தியத்திற்கு வேறுபட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய உறுதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் தங்களது உரிமைகள், கண்ணியம் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமைதியுடனும் பாதுகாப்புடனும் அருகருகே வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








