நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துகளைத் திருத்த வேண்டும் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள கருத்துக்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ‘மனிதநேய முறையில் விலங்குகளின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான கால்நடை வைத்தியர்கள் கூட்டமைப்பின்’ அழைப்பாளர் வைத்தியர் சமித் நாணயக்கார, GMOA-வின் குறித்த அறிக்கை தொடர்பில் தாம் கவலையடைவதாகத் தெரிவித்தார்.
ரேபிஸ் நோயை ஒழிப்பதில் விலங்குகளுக்கான ரேபிஸ் கட்டுப்பாடு மற்றும் மனிதர்களுக்கான ரேபிஸ் கட்டுப்பாடு என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விலங்குகளின் நோய்கள் மற்றும் அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பில் கால்நடை வைத்தியர்களும், மனிதர்களுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பில் மருத்துவர்களும் பயிற்சி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வைத்தியப் பீடங்களில் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சியை மருத்துவர்கள் பெற்றிருந்தாலோ அல்லது கால்நடை வைத்திய சபையில் பதிவு செய்திருந்தாலோ இதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாய்களுக்கான திட்டங்களை முன்னெடுப்பதிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிலும் சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினர் தலையிடுவது தொழில்சார் எல்லைகள் தொடர்பில் முரண்பாட்டை ஏற்படுத்துவதாக வைத்தியர் சமித் நாணயக்கார குறிப்பிட்டார்.
கால்நடை வைத்தியர்கள் தமது தொழில்சார் எல்லைகளை அறிந்து செயற்படுவதாகவும், மனிதர்களுக்கு சிகிச்சையளிப்பது அல்லது மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது போன்ற பணிகளில் தாங்கள் தலையிடுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தொழில்சார் உரிமைகளுக்காகப் பேசும் அமைப்பான GMOA, கால்நடை வைத்தியர்களின் தொழில்சார் கண்ணியத்தையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








