யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அரச சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி, எதிர்கால பொதுமக்கள் பயன்பாடு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புப் படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை மேற்கு, J/233 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள இந்தக் காணி, 1997ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
காணியை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பலாலி சிவில் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி கேர்ணல் W. M. A. M. நிஸ்ஸங்கவினால், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் M. பிரதீபனிடம் செப்டெம்பர் 30ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
காங்கேசன்துறையில் முன்மொழியப்பட்டுள்ள முதலீட்டு வலயத்திற்காக அரச காணிகளைப் பயன்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கால முதலீடுகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு தீபகற்பத்தில் முன்னர் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டில் இருந்த அரச காணிகளை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு வசதியளிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










