குழந்தை ஒன்றுக்கான பராமரிப்புக் கொடுப்பனவு தொடர்பான வழக்கில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னேவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தான் குறித்த குழந்தையின் தந்தை என்ற குற்றச்சாட்டை கருணாரத்னே மறுத்துள்ளார்.
செப்டம்பர் 28ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கருணாரத்னே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், கருணாரத்னே தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய கடமையில் ஈடுபடுவதற்காக ஜப்பானில் உள்ளார்.
தேசிய கடமை காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. இதன் காரணமாக, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடிப்படையாகக் கொண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, குழந்தைக்கான பராமரிப்புக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் தொடர்புடையதாகும்.
குழந்தைக்கான பராமரிப்புத் தொகையை கருணாரத்னே செலுத்துமாறு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.








