2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் துறையில் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக Rhodium Group அறிக்கையை மேற்கோள்காட்டி BusinessLine தெரிவித்துள்ளது.
இதில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 4 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் தற்போது 242.7 GW சோலார் மொட்யூல்கள் மற்றும் 40.5 GW சோலார் செல்கள் என அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோலார் பொருட்களைப் பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தும் அரசாங்க விதிமுறைகள், இந்தத் துறையின் விரிவாக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. மேலும், எதிர்காலத்தில் கூடுதலாக 40 GW சோலார் செல் உற்பத்தித் திறன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் இந்திய சோலார் உற்பத்தியாளர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன. இந்தியாவுக்கு எதிராக 123.04% எதிர்ப்பறை வரி (Anti-dumping margin) மற்றும் 107.17% எதிர்சலுகை வரி வைப்பு விகிதம் (Countervailing duty deposit rate) முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்கள் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனவா என்பதை அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் (USITC) இன்னும் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய சோலார் ஏற்றுமதி மூலம் சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இந்திய உற்பத்தியாளர்கள் நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு சந்தையை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என BusinessLine தெரிவித்துள்ளது. அதேவேளை, சில நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருகின்றன.








