ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வெற்றி பெற்று வருவதாக குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முன்வைத்து வரும் இதே கூற்றை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நாம் வெற்றி பெற்று வருகிறோம். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறப்போவதில்லை. ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. ஈரானிய கடற்படை கடலின் அடியில் உள்ளது. அவர்களின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது, அவர்களின் தலைவர்கள் அவநம்பிக்கையான நிலையில் உள்ளனர்” என ஸ்காட் சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் படையின் (CENTCOM) தளபதி பிராட் கூப்பர் செனட் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததைத் தொடர்ந்து ஸ்காட் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், குடியரசுக் கட்சியினரிடையே கவலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் போருக்கான ஆதரவு தொடர்ந்து குறைந்து வருவதுடன், எரிசக்தி விலைகளும் அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.







