அப்ரா அன்சார்
கொழும்பு
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் முக்கிய அடையாளச் சின்னங்களுக்கு அருகில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பிரமாண்டமான “வெற்றி வளைவு”, ட்ரோன்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை சேமித்து வைக்கும் இராணுவ வளாகமாகவும் பயன்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும், “தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும்” திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை சேமித்து வைத்து அவற்றை விரைவாகப் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டிடத்தின் கூரை மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் துப்பாக்கிச் சுடும் வீரர்களை நிலைநிறுத்தவும், அவர்களுக்குத் தேவையான பெருமளவிலான வெடிமருந்துகளை சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“உலகில் இதுபோன்ற வேறு எந்த வளாகமும் இருக்காது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கடந்த ஆண்டு இந்த பிரமாண்டமான நினைவுவளைவை அமைக்கும் திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.
பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ஆர்க் டி ட்ரையோம்ப்’ (Arc de Triomphe) போன்ற நினைவுச் சின்னமாக இது அமையும் என்றும், அவற்றைவிட மிகப்பெரியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக வெளியிடப்பட்ட திட்டத்தின்படி, இந்த நினைவுவளைவு சுமார் 76 மீற்றர் (250 அடி) உயரத்தில் அமையவிருந்தது.
எனினும், வொஷிங்டன் நகரில் புதிய கட்டிடங்களின் உயரத்திற்கு சட்டரீதியான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்தத் திட்டம் அதன் அளவு, அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் ஆர்லிங்டன் தேசிய கல்லறையின் காட்சியை மறைக்கும் சாத்தியம் உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பம் முதலே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
வியட்நாம் போரில் பங்கேற்ற மூன்று முன்னாள் இராணுவ வீரர்கள் கடந்த பெப்ரவரி மாதம் இந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.
நினைவுவளைவு அமைக்கப்பட்டால், ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கும் லிங்கன் நினைவுச் சின்னத்துக்கும் இடையிலான காட்சி மறைக்கப்படும் என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நினைவுவளைவு தொடர்பான எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அறிவிப்பு வழங்குமாறு நீதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். எனினும், இந்தத் திட்டத்திற்கு எதிரான விரிவான சட்டச் சவால் தொடர்பில் இதுவரை இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை.
ட்ரம்ப் நியமித்த அமெரிக்க நுண்கலை ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் நினைவுவளைவுக்கான ஒரு வடிவமைப்புக்கு ஒப்புதல் வழங்கியது.
அந்த வடிவமைப்பில் நினைவுவளைவின் அடிப்பகுதியில் தங்க நிறச் சிங்கங்களின் சிலைகளும், மேல்பகுதியில் தங்க நிறக் கழுகுகள் மற்றும் இறக்கைகளைக் கொண்ட தேவதையின் சிலையும் இடம்பெற்றிருந்தன.
இதற்கிடையில், அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு இந்த நினைவுவளைவு விமானப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.
எனினும், நினைவுவளைவின் உச்சியில் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட வேண்டும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வொஷிங்டன் டி.சி.யில் ட்ரம்ப் முன்னெடுத்து வரும் பல திட்டங்களில் இந்த நினைவுவளைவு திட்டமும் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சில போராட்டக்காரர்கள் கென்னடி கலை நிகழ்ச்சி மையத்தைச் சுற்றி மனிதச் சங்கிலியையும் உருவாக்கினர்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையிலும் ட்ரம்ப் சுமார் 400 மில்லியன் டொலர் செலவில் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி இடிக்கப்பட்டு, சுமார் 8,400 சதுர மீற்றர் (90,000 சதுர அடி) பரப்பளவில் பிரமாண்டமான நடன மண்டபம் அமைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தில் நிலத்தடியில் பாதுகாப்பு பதுங்குமிடமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்புகள் இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தன. எனினும், கடந்த மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதித்தது.
நினைவுவளைவு திட்டத்தைப் போலவே, புதிய நடன மண்டபத்திற்கான தேவையையும் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு காரணங்களுடன் நியாயப்படுத்தியுள்ளார். மேலும், அதனை “இராணுவ வளாகம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(மூலம்: அல்ஜசீரா)







