அப்ரா அன்சார்
கொழும்பு
ஈரானில் தன்னார்வ பொதுமக்களை பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயிற்றுவித்து, ஆயுதம் ஏந்தச் செய்யும் வகையில் ‘ஜன்ஃபடா’ (Janfada) எனப்படும் பெருமளவிலான மக்கள் அணிதிரட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் ராக்கெட் செலுத்தும் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் இராணுவத் தொடர்பாடல் சாதனங்களின் படங்களுடன், “இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் அதிகாரிகளின் இந்தப் பிரசாரம், இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் (IRGC) கீழுள்ள பசீஜ் (Basij) துணைப்படையின் ஒரு பகுதியாக தன்னார்வ பொதுமக்களைப் பயிற்றுவித்து அணிதிரட்டும் முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் உச்சக்கட்டத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில் இந்த ‘ஜன்ஃபடா’ அணிதிரட்டல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இந்தத் திட்டத்தின் கீழ் தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை முதல் பொதுவான “இராணுவப் பயிற்சி” நடத்தப்பட்டது. இதில் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த அணிவகுப்பில் 313,000 பேர் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். எனினும், அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை.
ஷியா இஸ்லாமிய மரபில் 313 என்பது, இறுதிக்காலத்தில் தோன்றி நீதியை நிலைநாட்டுவார் என நம்பப்படும் இமாம் மஹ்தியின் முக்கியத் தோழர்களின் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.
தெஹ்ரான் நகர IRGC தலைவர் ஹசன் ஹசன்சாதே, இந்த வாரம் 600,000க்கும் அதிகமானோர் செயற்பாட்டு அணிதிரட்டல் பிரிவில் இணைய இணையத்தளத்தின் ஊடாகப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்வார்கள் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும், ஏற்கனவே 1,000 ஆரம்பப் பிரிவுகள் அல்லது “பட்டாலியன்கள்” உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு எண்ணிக்கை தொடர்பில் சர்ச்சை
‘ஜன்ஃபடா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குப் பின்னர், 31 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த எண்ணிக்கை ஈரானின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானதாகும்.
எனினும், வெளிநாடுகளில் உள்ள செயற்பாட்டாளர்கள் இணையத்தளத்தின் மூலக் குறியீட்டை ஆய்வு செய்தபோது, நான்கு மில்லியனுக்கும் குறைவான பதிவுகளே இருந்ததாகக் கூறினர்.
பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் மட்டுமே தேவைப்பட்டதாகவும், தேசிய அடையாள இலக்கம் அவசியமாக இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது 33 மில்லியன் பேர் பதிவு செய்துள்ளதாக ஹசன்சாதே தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல
‘ஜன்ஃபடா’ திட்டம் இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.
பதிவு செய்தவர்களில் 26 சதவீதம் பேர் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள், சமூக சேவைகள், ஊடகம் மற்றும் நிதி உதவி உள்ளிட்ட பிரிவுகளும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் தன்னார்வலர்கள் எரிபொருள், மின்சாரம் மற்றும் ஏனைய வளங்களை குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுவர்களுக்கும் முக்கியத்துவம்
இந்த அணிதிரட்டல் நடவடிக்கையில் சிறுவர்களும் முக்கியமாகக் காட்டப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவப் பயிற்சியில் சில இளைஞர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியிருந்தனர். மேலும் சிலர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
ஜன்ஃபடா திட்டத்தின் பேச்சாளர் சசான் சாரே, 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 வயதுக்குக் குறைந்தவர்களையும் இணைப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறுவயதிலிருந்தே “தியாகம், எதிர்ப்பு மற்றும் தேசப்பற்று” போன்ற கருத்துகளை அறிமுகப்படுத்துவதே நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களும் இந்த அணிவகுப்பில் கணிசமாகப் பங்கேற்றனர். அவர்களில் சிலர் ஆயுதங்களுடன் காணப்பட்டனர்.
இதன் நோக்கம் என்ன?
இந்த மக்கள் அணிதிரட்டல் நடவடிக்கையின் நோக்கம் குறித்து ஈரான் அதிகாரிகள் விரிவான விளக்கத்தை வழங்கவில்லை.
எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டுக்குள் மீண்டும் போராட்டங்கள் ஏற்படக்கூடிய சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மைய வாரங்களில் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அரபு வளைகுடா நாடுகளுக்கான நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அலி அல்ஃபோனே, ‘ஜன்ஃபடா’ நடவடிக்கை பசீஜ் அமைப்பின் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தோற்றத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக இருக்கலாம் என Al Jazeera-விடம் தெரிவித்துள்ளார்.
1980ஆம் ஆண்டு ஈரான்–ஈராக் போர் தொடங்கியபோது, மத மற்றும் தேசப்பற்று உணர்வுகளின் அடிப்படையில் நூறாயிரக்கணக்கான ஈரானியர்கள் தன்னார்வமாக முன்களப் போரில் இணைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 1988ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், பசீஜ் அமைப்பு உள்நாட்டு எதிர்ப்புகளை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதால், அதன் பொதுமக்கள் மத்தியில் இருந்த முன்னைய தேசப்பற்று சார்ந்த தோற்றம் பாதிக்கப்பட்டதாக அல்ஃபோனே தெரிவித்துள்ளார்.
தற்போதைய மக்கள் அணிதிரட்டல் நடவடிக்கை, எதிர்கால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பசீஜ் அமைப்பின் முன்னைய தேசப்பற்று சார்ந்த தோற்றத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் மட்டுமன்றி, ஈரானின் எல்லைப் பகுதிகளில் ஏற்படக்கூடிய உள்நாட்டு மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் உருவாகக்கூடிய பாரிய மக்கள் எழுச்சிகள் போன்ற சூழ்நிலைகளையும் ஈரான் அதிகாரிகள் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக ஆய்வாளர் அலி அல்ஃபோனே தெரிவித்துள்ளார்.
(மூலம்: அல்ஜசீரா)








