முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்த சில நாட்களுக்குப் பின்னர், போதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் மீண்டும் ஜனாதிபதி மன்னிப்புக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மந்திரயாவில் இன்று(20) நடைபெற்ற தனது ‘நவயயே பஹா விகுர்திய’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தனது எதிர்காலம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், சட்டத்தை மதிக்கத் தயாராக இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“எனது விதி எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியாது. தற்போது நான் அச்சப்படும் நேரம் இதுவல்ல. நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நான் சட்டத்திற்கு தலைவணங்குவேன். அதில் எந்த விவாதமும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கும் நடைமுறையில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அதற்காக தாம் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
“அதிகாரிகள் நடைமுறையில் தவறு செய்திருந்தால், அதற்காக நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்பற்றிய நடைமுறையில் ஏற்பட்ட தவறை தற்போதைய ஜனாதிபதி திருத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சமயப் பணிகளைத் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் மீண்டும் மன்னிப்புக் கோருமாறு பௌத்த மதகுருமாரிடம் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், 87 வயதான தனது தாயார் குறித்தும் அவர் உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார். தாம் சிறையில் அடைக்கப்பட்டால் மீண்டும் தனது தாயாரை சந்திக்க முடியாமல் போகலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் எந்தவொரு அரசியல்வாதியின் பின்னாலும் செயற்படவில்லை எனக் கூறிய ஞானசார தேரர், “நாங்கள் யாருடைய ஆதரவாளர்களும் அல்ல. நாங்கள் புத்தரின் சீடர்கள்” என தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டவை அல்ல என்றும், முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், தம்மால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அதற்காக மன்னிப்பையும் கோரியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி, 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன.







