கொழும்பு ஹைரியா பெண்கள் கல்லூரியின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (17) மாலை சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி ஜுமானா நிஸாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர் ஏ.எஸ். நஜீப் கௌரவ அதிதியாகவும், கொழும்பு பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் ஏ.ஏ. அஸீஸ் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கல்லூரி அதிபரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பிரதம அதிதி மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உரையாற்றினார்.
இதன்போது, மாணவிகளுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் ஆகியோர் நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், பாடசாலையின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு விசேட விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்ட மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உள்ளிட்ட அதிதிகளுக்கு கல்லூரி அதிபரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது.
இதன்போது மாணவிகளின் கஸீதா மற்றும் கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
ஏ.எஸ்.எம். ஜாவித்












