சவுதி அரேபியாவில் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவுதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டதுடன், கருணை காட்டுவதற்கான வாய்ப்பை திறந்துவைக்குமாறும் சவுதி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதம், உணரப்பட்ட அவமதிப்பால் அதன் மதிப்பை இழந்துவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வார்த்தைக்குப் பதிலாக உயிரைப் பறிப்பதில் ஒரு மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு சிறந்த மதத்தின் இதயத்திலும் உள்ளதாகக் கூறப்படும் “கருணையை” சவுதி அரேபியா வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தி வரும் நிலையில், சஜித் பிரேமதாச இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.








