முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாட்டின் பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் தாய்மைப் பொறுப்புகளையும் எவ்வாறு சமநிலைப்படுத்தினார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தனது பிள்ளைகளை காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் பணிகளை ஆரம்பித்து, இரவு வரை சுமார் 15 மணி நேரம் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார்.
தனது இலக்குகள் சவாலானவையாக இருந்ததால், அவற்றை அடைவதில் தான் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், காணிகளை விற்றும் கணக்குகளைச் சமநிலைப்படுத்தியும் குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்ததாகக் கூறிய அவர், அரச நிர்வாகத்தில் திறமையான அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது உறவினர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்றும், திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது பிள்ளைகள் உயர்கல்வியைப் பெற்றதுடன், ஊழல் அல்லது சர்ச்சைகளில் சிக்காமல் வாழ்வது குறித்து பெருமைப்படுவதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
“மிகவும் கடினமான பணியைச் செய்வதுடன், நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருந்தாலும், உங்கள் பணியையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் முறையாக ஒழுங்கமைத்தால், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மனிதர்களாக வளர்வதற்கான சரியான மதிப்புகளையும் சூழலையும் வழங்க முடியும்” என அவர் கூறினார்.
தனது கன்னியாஸ்திரி பாடசாலை கல்வியும், தனது பெற்றோரின் நடத்தையை அவதானித்ததும் தனது மதிப்புகளை உருவாக்கியதாகவும், அவற்றையே தனது பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







