தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்குகளில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக நடைபெற்ற தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தோட்டப்புறப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில் இந்தப் பட்டறை நடத்தப்பட்டது.
இதன்போது ஆசிரியர்களுக்கான வீடுகளை அமைத்தல், 34 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்தல், 23 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு மதில்களை அமைத்தல் உள்ளிட்ட அமைச்சரவை அனுமதி பெற்ற திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், ஆசிரியர்களின் திறன் மேம்பாடு மற்றும் மாணவர் நலன்புரி உள்ளிட்ட துறைகளில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தோட்டப்புறப் பகுதிகளில் இருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்களை அதிகளவில் உள்வாங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், இதற்காக அப்பகுதிகளில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மேம்படுத்துவது இந்தப் பணியின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.








