பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று (18) இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் பகுதியில், பொலிஸ் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலின் நுழைவாயிலில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வெடிப்பில் உயிரிழந்த குறைந்தது 15 பேரின் உடல்களும், காயமடைந்த 50க்கும் மேற்பட்டோரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக dpa செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி வைத்தியர் தாஹிர் ஷா தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும், இந்தப் பிராந்தியத்தில் ISIL அமைப்பின் பிராந்திய கிளையும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பும் செயல்பட்டு வருவதுடன், பாதுகாப்புப் படையினரை இலக்காகக் கொண்டு அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் எல்லையை அண்மித்த பாகிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானில் தாக்குதல்களைத் திட்டமிடும் ஆயுதக் குழுக்கள் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் இருந்து செயல்படுவதற்கு அந்நாட்டு தலிபான் ஆட்சியாளர்கள் அனுமதிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.








