2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட சூர்யா – ஜோதிகா தம்பதி, தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தம்பதியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முன்னிட்டு நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், தங்களது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிகா,
“எங்களின் 20 ஆண்டு கால காதலையும், சண்டைகளையும் கொண்டாடும் ஒரு திருமண உறுதிமொழி ஏற்பு. இது குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல.
இது எங்களின் குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததன் கொண்டாட்டம். இது எங்களுக்கான கொண்டாட்டம். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மாறியதன் கொண்டாட்டம்.
நிஜத்திற்கு வெகுதூரம் இருப்பதாக நினைத்த ஒரு கனவு, இப்போது என் வாழ்நாள் முழுவதும் நான் ரசித்து வாழும் நிஜமாக மாறியிருக்கிறது. என்ன ஒரு முரண்?” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது திருமண வாழ்க்கையின் புதிய உறுதிமொழிகளையும் ஜோதிகா பகிர்ந்துள்ளார்.
சூர்யா – ஜோதிகா இருவரும் 1999ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சந்தித்தனர். தொடர்ந்து ‘காக்க காக்க’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இவர்களது நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் கடைசியாக ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, பின்னர் மீண்டும் சினிமாவில் களமிறங்கி தற்போது தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.







