முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித சிறிவர்தன, தலா 50,000 ரூபாய் வீதமும், அப்போதைய CID பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, தலா 10,000 ரூபாய் வீதமும் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நஷ்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.








