இன்றும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் மில்லகந்த, எலகாவ பகுதிகளில் நீர்மட்டம் தற்போது உயர்ந்த நிலையில் காணப்படுவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
களனி கங்கையின் நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், எனினும் இதுவரை வெள்ள அபாயம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில்வலா, கிங், களனி, களு, அத்தனகலு மற்றும் பெந்தர ஆகிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளிலும் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வானிலை நிலவரத்துக்கு ஏற்ப நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், குறித்த ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








