கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதி பாதை அருகே கைவிடப்பட்டிருந்த 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு பயணப் பொதிகளுக்குள் காற்று புகாதவாறு 60 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் தொகை, 14.09.2026 தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-405 ரக விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திற்குள் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தினால் குறித்த பயணி இந்த போதைப்பொருள் தொகையைக் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சந்தேகிக்கிறது.
குறித்த பயணப் பொதிகளைக் கொண்டு வந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகை 15.09.2026 நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.








