கடந்த காலங்களில் அன்சார் அல்லாஹ் எனப்படும் ஹூதி இயக்கம் பாப் அல்-மந்தப் நீரிணைப்பில் வெற்றிகரமான முற்றுகையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சவுதி மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் செங்கடலைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, பாப் அல்-மந்தப் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் (186 மைல்) தொலைவில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் செங்கடலில் உள்ள இலக்குகளை நேரடியாகத் தாக்கியுள்ளன. இதனால், அந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல் இருந்தபோதிலும் ஹூதிகளால் வெற்றிகரமான கடல் முற்றுகையை மேற்கொள்ள முடிந்தது.
தற்போதைய நிலைமை ஹூதிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பரப்பை மேலும் விரிவுபடுத்துகிறது. முன்னதாக பாப் அல்-மந்தப் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீற்றர் (124 மைல்) தொலைவில் இருந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவிய அவர்கள், தற்போது கடற்கரைக்கு அருகிலிருந்தே குறுகிய தூரக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது ‘ட்ரோன் படகுகள்’ மூலம் சவுதி கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்களை இலக்குவைக்க முடியும்.
பாப் அல்-மந்தப்புக்கு வடக்கே அமைந்துள்ள ஹனிஷ் தீவுகளும் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. செங்கடலில் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்க முக்கியமான இந்தத் தீவுகள், ஹூதிகளுக்கு மேம்பட்ட ரேடார் மற்றும் கண்காணிப்பு திறன்களை வழங்குகின்றன.
இதன் மூலம் கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக வரும் கப்பல்களையும் கண்காணிக்க அவர்களால் முடிகிறது.
எனினும், ஹூதிகள் அறிவித்துள்ளபடி, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் வழியாகச் செல்ல தடை விதிக்கப்படுவது சவுதி கப்பல்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சக்திகள் ஒருங்கிணைந்து ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், பாப் அல்-மந்தப் நீரிணைப்பை காலவரையின்றி மூடுவதற்கு தாங்கள் தயங்கப் போவதில்லை என்றும் அந்த இயக்கம் எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப்பும் பாப் அல்-மந்தப் நீரிணைப்பும் ஒரே நேரத்தில் மூடப்பட்டால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 முதல் 25 சதவீதமும், உலகளாவிய கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் சுமார் 10 சதவீதமும் பாதிக்கப்படலாம்.
இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படக்கூடும்.







