யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சில குடும்பங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், முழு கிராமங்களே கைவிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிபொருள் இன்றி கடலில் சிக்கித் தவித்த சுமார் 500 அகதிகள் கடந்த சில நாட்களில் ஜிபூட்டிக்கு சென்றுள்ளனர்.
இந்த புதிய இடப்பெயர்வு, ஏற்கனவே நீடித்து வரும் யெமனின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரால் யெமன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய மோதல்கள் தொடங்குவதற்கு முன்னரே, சுமார் 52 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருந்ததாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்களான சுமார் 2.23 கோடி பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
யெமனில் ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள உணவுப் பாதுகாப்பு நிலைமை 2026ஆம் ஆண்டில் மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டம் (WFP) கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது.
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் மக்கள் பேரழிவு நிலையை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டிருந்தது.







