குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளமை தொடர்பில் இன்று (11) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வழங்கிய பதிலின்போதே இந்தத் தகவல் வெளியானது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய அஸ்வெசும நிவாரணத்தை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், அஸ்வெசும வேலைத்திட்டம் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், அது ஆரம்பிக்கப்பட்ட போதே சட்டத்தின் அடிப்படையில் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகளை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும வேலைத்திட்டம் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 1,761,116 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், 2025ஆம் ஆண்டு பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆக இருந்த நிலையில், இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் அது 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும நன்மைகள் அதிவறிய, வறிய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்றும் இடைக்காலம் என நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இடைக்காலப் பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, தற்போது அதிவறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவினருக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதேவேளை பயனாளிகள் தொடர்பான மீளாய்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








