பண்டாரவளை நீதவான் நீதிமன்றம், காலாவதியான 1,300-க்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்கள், விலை மாற்றப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் சட்டப்படி அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிப்பிடப்படாத மருந்துகளை அழிக்க உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்ட குறித்த பொருட்கள் தொடர்பில், மொத்தம் 2 இலட்சத்து 30,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 5ஆம் திகதி பண்டாரவளை, எட்டம்பிட்டிய வீதியில் அமைந்துள்ள பிரபாஹரன் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, Aquasoft Lotion என்ற பெயரிலான காலாவதியான 24 பொதிகள், ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை அழித்துவிட்டு புதிய அதிக விலையைப் பதிவு செய்திருந்த Dyna Orthopedic Braces 97, விலைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் விலைச் சீட்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், சட்டப்படி அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத 1,180-க்கும் மேற்பட்ட மருந்துப் பொதிகளும் கைப்பற்றப்பட்டன.
குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, Hemas Surgicals & Diagnostics (Pvt) Ltd நிறுவனத்திற்கு 1 இலட்சம் ரூபாயும், Hemas Pharmaceuticals (Pvt) Ltd நிறுவனத்திற்கு 1 இலட்சம் ரூபாயும், Prabaharan Agencies நிறுவனத்திற்கு 30,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், வழக்குப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் முழுமையாக அழிக்க நீதவான் உத்தரவிட்டார்.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் காலாவதி திகதி, குறிப்பிடப்பட்டுள்ள விலை மற்றும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய ஏனைய தகவல்களை சரிபார்த்து அவதானமாக செயற்படுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை மாற்றுதல் அல்லது கட்டாய தகவல்களை காட்சிப்படுத்தாமை தொடர்பான முறைப்பாடுகளை 1977 நுகர்வோர் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.








