மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தேர்தலை நடத்துவதில் போதிய அக்கறையும் அவசரமும் காட்டப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், 10 கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த செயன்முறைக்கு தங்களால் இனியும் ஆதரவளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் ஏற்கனவே தெரிவுக்குழுவின் முன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கும், பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவான முன்மொழிவை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சாணக்கியன் இராசமாணிக்கத்தினால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலமும் ஏற்கனவே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த விருப்பங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தின் முன் உள்ளன. இப்போது தேவைப்படுவது மேலும் தாமதிப்பதல்ல. தேர்தலை நடத்துவதற்கான முடிவை எடுத்து, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பமே அவசியம்,” என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதாகத் தெளிவாக உறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்தின் 128ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக மாகாண சபைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்றி இயங்கி வருவதால், தமது மாகாண பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலைமை தொடர்ந்து காலவரையின்றி நீடிக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான காலக்கெடுவுடன் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் தெரிவுக்குழுவையும் அவர்கள் கோரினர்.
தெரிவுக்குழு தீவிரமான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தவறினால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் “மிகவும் தீவிரமான முடிவொன்றை” எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என சாணக்கியன் இராசமாணிக்கம் எச்சரித்தார்.
எனினும், அந்த முடிவு தொடர்பான விபரங்களை இந்நிலையில் வெளியிட அவர் மறுத்தார்.









