முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது பல சேனாவின் (BBS) பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு தன்னிச்சையானதும் சட்டரீதியாக செல்லுபடியற்றதுமாகும் என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கொள்கை மாற்றங்களுக்கான நிலையம் (CPA) மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனது தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2019ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்தத் தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டிய வகையில் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி, 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் ஞானசார தேரர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.
( Daily Mirror)









